கண் கண்ட தெய்வத்தை
கதறி அழ வைத்து
தரணி தன்னில் தரித்ததாலோ
கண்ணீர் படலம்
கடைசி வரை தொடர்கிறது!
ஒன்றரை ஆண்டு
முடியும் வரை அழுகை கொண்ட
மொழியான கண்ணீர்!
தவழும் வயதிலும்
நடை பயிலும் பொழுதிலும்
தடுக்கி விழும் போது
தோல்வியான கண்ணீர்!
முதல் நாள் பள்ளி அறை
முந்தானை பிடித்து அழும்
அம்மாவின் அரவணைப்பிற்கான கண்ணீர்!
பள்ளி தோழமை
பாதியிலே போகும் போது
தோழமைக்கான கண்ணீர்!
பட்டுபூச்சி பறக்கும் வயது
காதல் அர்த்தம் தெரியாவரும்
நிலை தடுமாறும் கண்ணீர்!
வீட்டு நிலையறியா காதல் மோகம்
பரீட்சை தவறும் நிலை
விழி நனைத்த வலி நிறைந்த கண்ணீர்!
இருபது தாண்டுகையில்
வேலை தேடும் படலம் தந்த
வெறுப்பு நிறை கண்ணீர்!
அர்த்தமுள்ள காதலின்
வெற்றி தந்த ஆனந்த கண்ணீர்!
தோல்வி தந்த விரக்தி கண்ணீர்!
என்னுறவை சேருகின்ற
காமக் களவியின்
கற்பு கண்ணீர்!
முதற்பிரசவதில் கதறும்
மனைவி கைபிடித்து
தேற்றும் இயலாமை கண்ணீர்!
தந்தை பதிவி தக்க வாய்த்த மகிழ்சி
என் சிசுவின் மலர் பாதம்
முத்தமிட்டு பணிக்கும் பாச கண்ணீர்!
வயதான தந்தையை வருத்தத்தில் பார்க்கும்
என்னுடைய ஆறுதல் கண்ணீர்!
அவருடைய அர்த்தமுள்ள கண்ணீர்!
தவறிய தந்தையின் நிழற்பட அருகின்
தவமிருக்கும் தாயின்
அமங்கல கண்ணீர்!
எனக்கான உறவுகள் இழந்த தனிமையின்
நெஞ்சோடு சாய்ந்து பிள்ளை பாடும்
தாலாட்டு கண்ணீர்!
வரன் பார்த்து என் உயிரை
தாரை வார்க்கும் தவிப்பில்
கை அசைத்து சொல்லும் புரியாத கண்ணீர்!
விதி அழைப்பிற்காய் செல்ல தயாராகி
என் இழப்பை நினைத்து அழும்
உறவுகளை எண்ணி அழும் நன்றி கண்ணீர்!
பிறப்பிக்கும் இறப்பிற்கும்
கண்ணீரே பாலம்
கரைந்தோடும் காலத்தே
கண்ணீர்க்கு ஒரு நன்றி
விழி தாண்டி வரும் போது
வலி விடுத்து வழி தொடுத்து வா!






